காதலென்னும் விரகநெருப்பு
மனமென்னும் எரிமலைக்குள்
சித்திரப்பூ பூத்துவிட்டால்
சந்தோசமழை சிந்திச்சிந்தி
நினைவலைகளோ கனவுகளில் நீராடும்
வாலிபம் ஏங்கித் தவிக்கும்
பருவகாலச் சிந்து அதுவன்றோ
இதயவாசல்களைத் திறந்து
காதல் வானவில்லொன்று
கனவுகளாலும் கண்ணீராலும்;
வரையப்படும்;
இரவும் பகலும்
சுரங்களைச் சுரக்கும்
காதல் வீணையது
விழித்திருந்தால் கூட
கனவுகள் அங்கே சங்கமமாகும்
ஒருவரை ஒருவர் காணத்துடித்து
பலநூறு நிமிடங்கள்
ஒற்றைக் காலில் தவமிருக்கலாம்
ஏக்கத்தில் சுவாசக்காற்றும்
அப்போது ராகமாகும்
நெருப்பின் சுடர்கள் எண்ணையின்றி
நெஞ்சிற்குள் எரியும்
கோரிக்கையில்லாததோர்
உண்ணாநோன்பு உருவாகும்
ஒருவரையொருவர்
அணைத்திடத் துடித்திட்டால்
கூச்சங்கள் விம்மி நிற்க
கரங்கள் நான்கும் தூரிகையாகும்
குளிர்ந்து இருக்கும் இரத்த நாளங்கள்
வெப்பப் புரட்சிக்குத் தயாராகும்
உதடுகள் இரண்டும்
உரசத் துடிக்கும்
அந்த
பருவ ஏக்கம் வந்த நெஞ்சிற்குள்
அற்றை நாள் இருவருக்கும் விடியாது
சூரியன் உதிப்பதும் தெரியாது
காதலினால் இதுவோர் விரகநெருப்பு
சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்
Monday, April 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment